Pages

Tuesday 16 February 2016

சூழலியல் அடிப்படைவாதம் : இந்துத்துவ இயற்கையாளர்கள்




அண்மையில் “பேராபத்தில் புவிக்கோளம்(Earth in Peril)என்ற தலைப்பில் எஸ் பி  கோபிநாதன் நாயர் எழுதிய  ஆங்கில நூலை வாசித்தேன்.நூலில் கூறப்பட்டுள்ள சாராம்சம் இதுதான்

  • பூவுலகின் அழிவு நிலைமைகளை விளக்குவதாகஅதீத எதிர்மறை  நிலையில்  நின்றுகொண்டு இயற்கையை புனிதப்படுத்துவது,தெய்வீகமயப்படுத்துவது
  • இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை அறிவியல் அடிப்படையில் அல்லாமல் ரோமன்டசிஸ் செய்வது
  • இந்துத்துவ சார்புநிலை கருத்தியலோடு இயற்கை அறிவியலை இணைப்பது.
இறுதியாக,

காந்தியின் தனி நபர் ஒழுக்க நெறிகளும்  இந்துமதத்தின் கலாச்சார வேர்களுமே இவ்வுலகம் எதிர்கொள்கிற சூழலியல் சிக்கலுக்கு தீர்வாக இருக்க முடியும்
என  தனது இந்துத்துவ அடிப்படைவாத கருத்தியலோடு சூழலியல் சிக்கல்கள் மீதான ஆய்வுகளை இணைக்கிறார்.

சூழலியல் சிக்கல்களை அடிப்படைவாத கண்ணோட்டத்தில் அனுகுகிற திரு எஸ் பி  கோபிநாதன் நாயர் போன்று பல கோபிநாதன்கள்  தமிழகத்தில் இயற்கைவாதம் பேசித்திரிவதால்,அவர்களுக்கான நமது விமர்சனம் அவசியமாகிறது.சரி நூலுக்குள் செல்வோம்.

நூலின்,ஒரு அத்தியாயம் புராதன இந்திய நோக்கில்(இயற்கை)என்ற தலைப்பில் கீழ்வரும் வகையில் எழுதிச்செல்கிறார்.

“மேற்குலகில் இயற்கையை வெறும்  பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகினார்கள்.ஆனால் புராதன இந்தியாவில் இதற்கு நேரெதிரான வகையிலான தத்துவங்கள்  இருந்தன.வேதங்கள்,உபநிஷங்கள்,புராணங்கள்,இதிகாசக் கதைகள் மூலமாக மிகப்பெரிய ரிஷிகளும் யோகிகளும் பொருளாயத உறவுகளிலிருந்து விலகிய வாழ்கை முறை குறித்தும் மனிதர்களின் ஆன்மீக சிந்தனைகளை உயர்த்துவது போன்ற போதனைகளை எளிமையான முறையில்  மக்களிடம்  எடுத்துச்சென்றனர்.

இந்தியர்கள் இயற்கையை கடவுளாகவே பார்த்தனர்.சொல்லப்போனால் இயற்கை வழிபாடு என்பது அவர்களின் கலாச்சாரத்தோடு பிண்ணிப்பினைந்ததாகும்.அதர்வண வேதம் இயற்கையைத் தாய் என்று கூறுகிறது.நமது காயத்ரி மந்திரம் சூரியனை வழிபடுகிறது,நமது நதிகள் புனிதமாகத்  திகழ்கிறது.

மலைகளை கடவுளாக வழிபடுகிற காலச்சார மரபு நம்முடையது;முக்கியமாக கைலாச மலையானது சிவனின் தளமாக வணங்கப்படுகிறது.அவரது மனைவி பார்வதி இமாயவனின்(இமயமலையின் கடவுள்)மகளாக வழிபடப்படுகிறாள்.திபத்தியர்கள் அண்டங்களின் மையப்புள்ளியாகவே இமயமலையைக் கருதுகிறார்கள்.இந்தியாவில் பெரும்பாலான மலைகள் புனிதத் தளங்களாக உள்ளன.வடக்கில் பத்ரிநாத்,கேதர்நாத்,அமர்நாத்தும் தெற்கில் திருப்பதி,சபரிமலை என மலை உச்சிகளே புனிதத் தளங்களாக திகழ்கின்றன.உயரமான மலைச் சிகரங்களில்  சுத்தமான காற்று கிடைத்து உடல் புத்துணர்ச்சி பெறவும் ஆன்மீக புத்தணர்ச்சி அடையவும்  நமது முன்னோர்கள்  மலை உச்சிகளில் கோவில்களை அமைத்தனர். இந்தியர்களால் அதிகம் விரும்பப்படுகிற கடவுளான ஸ்ரீ கிருஷ்ணன்  மலைகளின் முக்கியத்துவம் குறித்து பிருந்தாவானத்தில் வாழ்கின்ற மக்களிடம் எடுத்துரைத்துள்ளார்.கால்நடைகளுக்கு நீரும் புல்லையும் அளிக்கிற கோவர்த்தன மலையைத்தான் வழிபட வேண்டுமே ஒழிய இந்திரனை வழிப்படக்கூடாது என ஸ்ரீ கிருஷ்ணன்   மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.மக்களும் அவ்வாறு செய்தக் காரணத்தால்  இந்திரன் கோவமடைந்து கடும் மழையைய் பொழியைச் செய்தார்,பின்பு ஸ்ரீ கிருஷ்ணன்   அம்மலையையே தூக்கி குடையாக்கி மக்களை காத்தார்.ஆர்வமூட்டுகிறவகையில் தொன்மக் கதையாக  இருந்தாலும் இக்கதை மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

நதிகள் இந்திய கலாச்சாரத்தோடும் வாழ்முறையோடும் இரண்டரக் கலந்தவையாகும்.நதிகள் பெண்ணாகவும் கடவுளாகவும் இந்தியாவில் பூசிக்கப்படனர்.ரிக் வேதமானது நதிகளைக்  அச்ப்ரஸ் என்கிறது.புராதன இந்து இதிகாசங்களின்படி கங்கை,யமுனை,சரஸ்வதி,கோதாவரி,நர்மதா,காவேரி போன்ற நதிகள் புனிதமாக கருதப்படுகின்றன.கங்கை நதியானது பகீரதனின் முயற்சியால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
மரங்களின் முக்கியத்துவம் குறித்து அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.அதேபோல ராமாயனத்திலும் மகாபாரதத்திலும் காடுகள் மலைகள் பற்றின விவரணைகள் உள்ளன.

ஸ்ரீமத் பகவத் கீதையில், விலங்குகளை நம் குழந்தைகளைப் போல பேணிக் காக்க வேண்டும் என்று குறிப்புகள் உள்ளன.விஷ்ணுவின் பத்து அவதாரமும் விலங்குகளாகவே உள்ளன.இதுவே விலங்குகளுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதற்கான சான்றாகும்.அதேபோல பெரும்பாலான இந்தியக் கடவுள்கள் விலங்குகளையே வாகனங்களாக கொண்டுள்ளன.உதாரணமாக முருகனுக்கு மயில்,விநாயகனுக்கு எலி,விஷ்னுவுக்கு கருடன்,சிவன் கழுத்தைச் சுற்றி பாம்பு என அனைத்துக் கடவுள்களும் விலங்குகளோடு இணைந்தே உள்ளார்கள்.ஹனுமான் வழிபாடு குரங்குகளை அழிவிலிருந்து காக்க உதவியது.
ராமாயனத்திலும்  விலங்குகளுக்கு முக்கிய கதாப்பாத்திரங்கள்  வழங்கப்பட்டுள்ளன.ஜாடாயு,ஹனுமான்,சுக்ரீவன் போன்ற கதாப்பாத்திரங்கள் ஸ்ரீ ராமர் காட்டில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது பெரிதும் உதவின”(Earth in Peril,பக்கம் -244-250)

இப்படியாக ஒரு அத்தியாம் முழுக்க மலைகள்,நதிகள்,மரங்கள்,விலங்கினங்கள் அனைத்தும் இந்தியர்களின் வாழ்வியலோடும் பண்பாடோடும் பிண்ணிப்பினைந்துள்ளதாக எழுதுகிற நமது எஸ் பி கோபிநாதன் நாயர் மிக லாவகமாக  
இந்து என்று சொல்லுக்கு பதிலாக  இந்தியர்கள் என்றும், 
இந்து மதப் பண்பாடு என்று சொல்லாமல் இந்தியர்களின் பண்பாடென்றும்,
இந்து மதக் கடவுள்கள் என்று குறிப்பிடாமல் இந்தியர்களின் கடவுளென்றும் 

தனது இந்து மத அடிப்படைவாத புனைவுகளுக்கு இயற்கைவாத சாயம் பூசிச்செல்கிறார்.
ஆனாலும் அவர் ராமாயணத்தை முழுமையாக படிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.ராமருக்கு பாலம் கட்ட அணில்கள் உதவியது,மானைத் தேடித் காணாமல் போன  லக்ஷ்மணனின் கதைகளை குறிப்பிடாமல் போனதே  நமது ஐயத்திற்கு காரணம்!மேலும் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததால் ஸ்ரீ ராமரே இயற்கைவாதிதான் என  குறிப்பிடாமல் போனதும் நமக்கு வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

அதுபோல தாமரை மலரில் சரஸ்வதி அமர்ந்துள்ள காரணத்தால் இந்தியர்களின் வாழ்வில் இயல்பாவே மலர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்று அவர் எழுதாமல் போனதில்  பெரும் வருத்தம்தான்.

இந்து மத இதிகாச புராணங்களின் வருகிற பாத்திரங்களை பிடித்துக் கொண்டு இயற்கை வாத சாயம்  பூசுகிற இவ்வறிவுக் கொழுந்துகளுக்கு கிரேக்கம்,எகிப்து போன்ற நாடுகளில் இப்படியான தொன்மைக் கதைகளில் விலங்குகளும் பல விசித்திர உருவம் கொண்ட உயிரனங்களும் இடம் பெற்றுள்ளன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது பாவம்.

நிறுவனமயப்பட்ட மதங்களின் ஊடாக   இப்பிற்போக்கு கருத்தியலை வளர்த்தெடுத்து ஜனரஞ்சகப்படுத்துகிற இவ்வகையான அடிப்படையான கருத்தமைவுகளுக்கு நமது இயற்கையளார்களும் பலி ஆவதுதான் வேதனை.தமிழகத்தில்,இயற்கைவாதம் பேசுகிற பல இளம் இயற்கை ஆர்வலர்களிடமும்  இச்சிக்கல் உள்ளது.

நவீன இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான இயற்கையாளர்கள் முன்வைக்கின்ற  விளக்கங்கள் இவ்வகையிலான பார்ப்பனிய சாயத்துடன் இருப்பதில்  நமக்கொன்றும் வியப்பில்லை.!சனாதன வைதீக மதக்கருத்தியலின் ஊடாக திரிபுவாத புனைவு வரலாற்றை எழுதிய இருபதாம் நூற்றாண்டின் பார்ப்பன/ஆதிக்க இந்து சாதிய வரலாற்றாளர்கள்தான் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இயற்கையாளர்களாகவும் சூழலியலாளர்களாக பரிணமித்துள்ளார்களோ என்ற ஐயம் மட்டுமே நமக்கு மேலெழும்புகிறது!

நதிககளுக்கும் மலைகளுக்கும் புனித அங்கி அணிவிக்கிற இவ்வகையிலான   இறையியல  சூழல்வாத அறிவுஜீவிகள் வெளிப்படையான இந்துமதத்தின் பாதுகாவலர்கள் ஆவார்கள்.

பொதுவாக,இயற்கையை இறையியலுடன் இணைக்கும் கருத்தமைவானது  அரசுருவாக்கத்திற்கும் அதற்கிசைவான  அரசியல் பொருளாதாரத்திற்குமான  அடித்தளத்தை வழங்குவதாலும் சமூகத்தை மேலாதிக்கம் செய்வதற்கு பயன்படுவதாலும்,இக்கருத்தியலை  அம்பலப்படுத்துகிற பொருள்முதல்வாத விளக்கங்களுக்கு எதிரான  கருத்து முதல்வாதிகளின் மோதல்கள் வரலாரெங்கிலும் நடைபெற்று வருகின்றன.அவ்வகையில் இந்திய துணைக்கண்டத்தில் லோகாயுதம்,பௌத்தம்,சமணம் என்ற முப்பெரும் புரட்சிகர பொருள்முதல்வாத தத்துவங்களுக்கும் வைதீக மற்றும் வேதத்தை அடிப்படையாக கொண்ட கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கு இடையிலான  பெரும் போராட்டமே இந்திய தத்துவ வரலாறாகத் தெரிகிறது.

மேற்குலகில், இறையியலுடன் இயற்கையை இணைத்த திருச்சபை இயற்கைவாதத்திற்கு அறிவொளிக் காலத்தில் கெப்ளர்,கலீலியோ,ஹார்வி போன்றோர்களும் அதைத்தொடர்ந்த அறிவியல் காலத்தில் டார்வினும் திருச்சபை இயற்கைவாதத்திற்கு மரண அடியைக் கொடுத்தனர்.மேற்குலகில் நடைபெற்ற அறிவியல் வளர்ச்சிகள் அதைத்தொடர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்துறை  எழுச்சிகள் அரசியல் பொருளாதார  மாற்றங்கள்  சமூகத்திடமிருந்து மதத்தை விலக்குவதாக அமைந்தது.




ஆனால் இந்திய ஒன்றியத்தில் நிலைமையோ தலைகீழாக இருந்தன.காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டமானது இந்துத்துவ  தத்துவவாதத்தால் உந்தப்பட்ட தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டதால்,மதமும் அரசியல் விடுதலையும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டன.இதன் காரணமாகவே ஒரு பெரும் வகுப்புவாத பிரிவினையோடு தொடங்கிய இந்திய விடுதலையானது இன்றைக்கும்  வகுப்புவாத கலவர நாடாகத் தேங்கிப்போவதற்கு  பெருங் காரணமாக அமைந்தது.அரசியல்,நிர்வாகம்,பண்பாடு,இன்ன பிற அனைத்து துறைகளிலும் இந்து மதக் கருத்தியல் ஆளும் வர்க்க கருத்தியலாக பற்றிப் படறிவிட்டன.அதன்  ஒரு தெரிப்புத்தான் நமது எஸ் பி கோபிநாதன்  நாயரின் இந்துத்துவ இயற்கைவாத கருத்தியல் !

No comments:

Post a Comment