Pages

Friday 1 April 2016

ரோசடோம் எனும் பூதம் –பகுதி -III




(கூடன்குளத்தில் அணுவுலைகளைக் கட்டுகிற ரஷ்ய நிறுவனமான ரோசடோமின்(ROSATOM) சிக்கலான வரலாறு பற்றின விமர்சனம்.கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கையை முன்வைத்து)


ரோசடோமின் பாதுகாப்புக் குளறுபடிகள்,தாமதங்கள்,அதிக செலவுகள்.. 

ரோசடோமின் உள்நாட்டு வெளிநாட்டு அணுவுலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகட்டும் சிறப்புச் சட்ட விலக்குகள் அளிப்பதாகட்டும், ரோசடோமின் செயல்பாடுகளுக்கு  ரஷ்ய அரசு பல தாராள சலுகைகள் வழங்கினாலும், அணுவுலை கட்டுமானப் பணிகளில்  தாமதம்,உபகரணங்களின் பாதுகாப்புத்தன்மை,உபகரணங்களின் தரம்,அதிகரிக்கிற திட்டச்செலவுகள்,நிர்வாகத்தில் புரையோடியுள்ள ஊழல்கள்  என ரோசடோமின் பெரும் குறைகளையும்  செயல்திட்டத்  தோல்விகளையும்  ரஷ்ய அரசால் தீர்க்கவோ காப்பாற்றவோ  இயலவில்லை!

அணுவுலைக் கட்டுமானங்களில்  அதிகம் செலவு பிடிக்கிற VVER தொழில்நுட்பத்தை பரிந்துரைத்து எதிர்கொள்கிற நெருக்கடி நிலைமைகளை  ரோசடோமின் தோல்விகளுக்கு இங்கே உதாரணமாகக் கூறலாம்.தனது வெளிநாட்டு அணுவுலைத் திட்டங்களுக்கு VVER தொழில்நுட்பத்திலான அணுவுலைகளைத்தான் தீவிரமாக பரிந்துரைத்து  ஒப்பந்தங்கள் போடுகிறது ரோசடோம்.இத்தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிற அணுவுலைகள்  கட்டுமானத்தில் ஏற்படுகிற நடைமுறைப் பிரச்சனைகளை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

அதிகரிக்கின்ற நிதிச் செலவுகள்:

முன்னதாக 2005 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் க்ரீன் பீஸ் அமைப்பின் சிறப்பு வல்லுநர் குழுவானது,VVER  தொழில்நுட்ப்பத்தில் ரஷ்யாவில் கட்டப்பட்ட அணுவுலைகள் குறித்த  சூழல் தாக்க ஆய்வை  மேற்கொண்டது.அக்குழுவானது, புதிதாக கட்டப்பட்ட பல்கோவ் அணுவுலையை முதலில் ஆய்வு செய்தது.ஒப்பீட்டுக்காக VVER  தொழில்நுட்ப்பத்தில் கட்டிமுடித்து செயல்பாட்டிற்கு வந்துள்ள கல்லினன்  அனுவுலையின் அலகு-3 ய் அக்குழு ஆய்வு செய்தது. 

2001 ஆம் ஆண்டில் கல்லினன்  அணுவுலையின் அலகு-3  திட்டம் தொடங்கப்படும் போது 8.2 பில்லியன் ரூபல், திட்டமதிப்பாக சொல்லப்பட்டது.ஆனால் 2005 ஆம் ஆண்டில் இத்திட்டச் செலவு 27.3 பில்லியன் ரூபல் ஆனது.அதாவது துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பைவிட மும்மடங்காக அடுத்த சில ஆண்டுகளிலேயே  உயர்ந்தது. ரோசடோமின்,VVER  தொழில்நுட்ப் அணுவுலைத் திட்டங்களின் விலை ஏற்றக் கதை  கல்லினன் அணுவுலையோடு நிற்கவில்லை.

முன்னதாக லெனின்கிராடு அணுவுலைப் பூங்காவில்(உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுவுலைப் பூங்கா)VVER-1200 தொழில்நுட்பத்திலான இரு அணுவுலை விரிவாக்கத் திட்டப் பணிக்கான உத்தேச திட்ட மதிப்பாக   46.9 பில்லியன் ரூபல்கள் ஆகும் என ரோசடோமிற்கு முந்தைய நிறுவனமொன்று கூறியது.மாறாக இதே ரக தொழில் நுட்பத்திற்கு ரோசடோமே,சுமார் 156 பில்லியன் ஆகும் என்றது.அதாவது மூன்று மடங்கு கூடுதல் விலையை ரோசடோம் கூறியது.VVER-1200 தொழில்நுட்ப ரக அணுவுலை திட்ட தாமதங்களே இவ்விலை ஏற்றத்திற்கு பெரும் காரணமாக உள்ளது.

ரஷ்யாவின் அணுவுலைத் திட்டங்கள் குறிப்பிட்ட இலக்கு காலத்திற்குள்ளாக கட்டி முடிக்க இயலாத பிரச்சனையை  சர்வதேச அணுவுலைக் கழகமே சுட்டிக்காட்டுகிறது.சில மாதகால தாமதங்களாக இவை இல்லாமல் நீண்டகால தாமதங்களே பெரும்பாலும் உள்ளன.உதாரணமாக, லெனின்கிராடு அணுவுலைப் பூங்காவில் கட்டப்பட்டுவருகிற புதிய அணுவுலைகள், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள்ளாக மின்தொகுப்போடு இணைக்கப்படும்  என 2012 ஆம் ஆண்டின்  இறுதியில்  ரோசடோம் அறிவித்தது.மாறாக தற்போது 2016 ஆம் ஆண்டின் இறுதி வாக்கில்தான் மின்தொகுப்போடு இணைக்க முடியும் எனக்  கூறிவருகிறது.
 
ரஷ்ய அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை:

ரஷ்யா அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து பேசும்போது,உலகின் மோசமான அணுவுலை விபத்துகளுக்கு ரோசடோம் ஒரு காரணமாக இருந்ததை நாம் மறக்கவியலாது.1986 ஆம் ஆண்டு செர்னோபில்லில்(தற்போதைய உக்ரேன்) ஏற்பட்ட அணுவுலை விபத்தானது  உலகம் சந்தித்த மிக மோசமான அணுவுலை விபத்தாக இன்றளவிலும் உள்ளது.ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட  நூறு மடங்கு சக்தியுள்ள  கதிர்வீச்சுப் பாதிப்பை செர்நோபில் அணுவுலை விபத்து ஏற்படுத்தியது. அணுவுலை உருகி ஊத்தியதாலும்,பெரு வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு பாதிப்பாலும் ஐரோப்பாவின் பல்லாயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்பு  அணுக்கழிவு கதிர்வீச்சால் மோசமான பாதிப்பிற்குள்ளானது. 

பெலாரஸ்,ரஷ்யா,உக்ரேன் பகுதிகளில் சுமார் 1,25,000 முதல் 1,50,000 கிலோ மீட்டர் பரப்பளவிளான நிலப்பரப்புகள்,நீர் நிலைகள் மோசமான கதீர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.அப்பகுதியில் வசித்துவந்த சுமார் மூன்றரை லட்ச்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்,தங்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.எதிர்காலத்தில்,இப்பகுதியில்,எந்த உணவு உற்பத்தியும்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கதிர்வீச்சால்  பாதிப்படைந்து,நஞ்சாக மாறிய  நிலப்பரப்பானது,பங்களாதேஷ் நாட்டின் நிலப்பரப்பிற்கு  ஈடாகும்.நெதர்லாந்து  நாட்டின் பரப்பளவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு  அதிகமான நிலப்பகுதி, நஞ்சாக மாறின.இன்றோடு,விபத்து நடந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் கத்திர்வீச்சுக்கழிவானது முழுவதுமாக  சிதைவுருவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

அதிகம் அறியப்படாத மற்றொரு அணுவுலை விபத்து கடந்த 1957 ஆம் ஆண்டில் தெற்கு உரால்சில் உள்ள அணுக்கழிவு கையாள்கிற வளாகத்தில்  ஏற்பட்டது.அங்குள்ள கதீர்வீச்சுக் கழிவுத் தொட்டி வெடித்ததால் சுமார் 20,000 சதுர கிலோ மீட்டார்  நிலப்பரப்பு கதிர்வீச்சுப் பாதிப்பால் நஞ்சாக மாறியது.சுமார் 10,000 மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இன்றும்கூட அங்கு சில பகுதிகளில் நடமாட தடை உள்ளது.
இவ்வளவு வீரியத்துடனான பெரு விபத்துக்கள் சமீப காலங்களில் நடைபெறவில்லை என்றாலும்,ரோசடோம் கட்டுகிற புதிய அணுவுலைத் திட்டங்களில்,பாதுகாப்பு விஷயத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோசடோமின் ஊழல்:

ஊழலுக்கும்   வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்திற்கும்  ரோசடோம் பெயர்பெற்றவை! ரோசடோமில்,கடந்த 2009-12 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 68 உயர்மட்ட அதிகாரிகளும் 208  நடுத்தர மேலாளர்களும் ஊழல் புகாரில் சிக்கி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 

சமீபத்தில்,ரோசடோமின் இணை இயக்குனர் எவெநோவ் எஸ்ட்ரதேவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை பெரும்பாலானோர் அறிவர்.ரோசடோமின்,அணுவுலைப் பாதுகாப்பு பிரிவுக்கு உயர் மட்ட பொறுப்பு வகித்த எவெநோவ் 50 மில்லியன் ரூபல் கையாடல் செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரலில்  வேலையை ராஜினாமா செய்த எவெநோவ் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டிலியே இவர் பிணையில் வெளிவந்தாலும் வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் உள்ளது. 
---- பூதம் இன்னும் வரும்
 

No comments:

Post a Comment